ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில் மாத்திரம் மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது எனவும், இலாபமடைந்தால் அதன் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,
எரிப்பொருள் நெருக்கடி
“எரிபொருள் மற்றும் மின்சார கட்டமைப்பில் கடந்த ஆண்டு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டோம்.
எரிபொருள் பற்றாக்குறை, மின்விநியோக துண்டிப்பை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்ற போராட்டம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.
பாரிய சவால்களுக்கு மத்தியில் அமைச்சராக பொறுப்பேற்றேன். நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், பிரதமர் உட்பட சகல தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலக சந்தையின் விலைக்கேற்ப எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கமைய 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09 ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது.
மின்சார கட்டணத்தை அதிகரிக்காமல் மின்னுற்பத்தி செலவுகளை முகாமைத்துவம் செய்ய 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை திறைசேரி சுமார் 400 பில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளது.
மின்னுற்பத்திக்கான கேள்வி
நாட்டின் மின்னுற்பத்திக்கான கேள்விக்கு அமைய மின்னுற்பத்தி நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவில்லை.
சம்பூர் அனல் மின்நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் உயர் நீதிமன்றம் சென்றார்கள்.
இதனால் சம்பூர் அனல் மின்நிலைய திட்டம் கைவிடப்பட்டது. இதனால் மின்சார சபை வருடாந்தம் 95 பில்லியன் ரூபாவை வருடாந்தம் மேலதிகமாக செலவிட்டது.
அதனை போல் உமா ஓயா திட்டத்துக்கு எதிராக பண்டாரவெல மற்றும் ஊவா வெல்லச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் 9 பில்லியன் ரூபா தாமத கட்டணத்தை செலுத்த நேரிட்டது. மின்வலுத்துறை தொடர்பில் எடுத்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரும் இன்றைய நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
இலங்கை மின்சார சபை
நிறைவடைந்த 10 மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை 60 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றது.
மின்சார சபை கடந்த 09 மாத காலப்பகுதியில் மாத்திரம் 12 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
மின்சார சபை இலாபமடையுமாக இருந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம். மின்சார சபையின் செலவுகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் மின்சார சபையின் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்குவதை நிறுத்தினேன்.
அத்துடன் வருடாந்தம் வழங்கப்படும் 25 சதவீத சம்பள அதிகரிப்பை இரத்து செய்தேன். நாட்டின் சக்தி வலுத்துறையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்பாந்தோட்டை பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்படும். இதனால் பலருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.
அத்துடன் அடுத்த மாதம் மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்,யாழ். பூநகரி மின்னுற்பத்தி திட்டம்,சம்பூர் அனல் மின்நிலைய திட்டம்,மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் மின்னுற்பத்தி திட்டம் உள்ளிட்ட ஆறு மின்னுற்பத்தி திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்.” என்றார்.