கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்தில் புகையிரத விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்து 5 உயிர்களை காப்பாற்றிய பெற்றோர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற வெயாங்கொடை, மாலிகதென்ன பிரதேசத்தினை சேர்ந்த 22 வயதான இசங்க என்ற இளைஞனின் உறுப்புகளே இவ்வாறு தானம் செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த 13 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பொலன்னறுவை நோக்கிப்புறப்படும் புகையிரதத்தில் ஏறியுள்ளார்.
இதன்போது தெமட்டகொட மற்றும் களனி புகையிரத நிலையங்களுக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது புகையிரதத்திலிருந்து இசங்க தவறி விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் சிக்கிய இசங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,மூளைச்சாவடைந்துள்ளதாக வைத்தியர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,வைத்தியர்களின் பரிந்துரைப்படி, கடந்த 15 ஆம் திகதி இசங்கவின் உடல் உறுப்புகளால் 5 பேர் வாழவும், 2 பேர் ஒளி காணும் அதிர்ஷ்டமும் பெற்றுள்ளனர்.
உறுப்பு தானம் செய்யும் வாய்ப்பு கிடைப்பது அரிதான தொண்டு எனவும், பிள்ளையின் தவிப்பிற்காக மனதில் இருந்த பெரும் வலி ஓரளவுக்கு குறைந்துள்ளதாகவும், இசங்கவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.