சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
சிறிலங்காவில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 2015ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் பாதுகாப்பு, நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் கரிசனை வெளியிட்டார். போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவது குறித்த காலஅட்டவணை எதையும் சிறிலங்கா கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த விவாதத்தின் போது, போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு சிறிலங்கா மறுப்புத் தெரிவித்து வருவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத் தொடுனர்களை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்கள் தெளிவான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் முற்றிலும் உள்நாட்டு பொறிமுறை ஒன்றையே அமைக்கப்போவதாக கூறியுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தைப் பாதுகாப்போம் என்று மூத்த அமைச்சர்கள் கூறியுள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி சுட்டிக்காட்டினார்.இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூகோ ஸ்வயர், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் நுட்பமான சமநிலை ஒன்றைப் பேண முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.