மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு மற்றும் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணையாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிந்துரை முன்வைத்துள்ளது.
சர்வதேச நாடுகள் சிலவும், ஈழ ஆதரவு தரப்பினரும் சர்வதேச ரீதியில் இதனை வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இலங்கை அரசாங்கம் இதனை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில், இலங்கை ஜனாதிபதி இந்த அறிவிப்பை மீண்டும் விடுத்துள்ளார்.