கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அமைந்துள்ள கட்டிடத்தின் பிரதான வாயில் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இங்கு நோயாளிகள் உட்செல்ல சிறிய கேட் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குள் வரும் நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, இந்தக் கட்டடத்தில் உள்ள விடுதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். ஆனால், நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளதால், நோயாளிகள் சிரமத்திற்கு முகம்கொடுக்கின்றனர். நேற்று (27) அந்த வழியாக சென்ற நோயாளி ஒருவர் கீழே விழுந்து காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
மேலும், பிரதான வாயில் மூடப்பட்டிருந்தாலும், மருத்துவமனை வளாகத்தில் ஒரு சில முச்சக்கரவண்டிகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இவற்றின் சாரதிகள், வாயில்களுக்கு அருகில் உள்ள காவலர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்கி தினமும் வைத்தியசாலை வளாகத்திற்குள் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.