சிசிடிவி கேமராவை அகற்றியது குறித்து அப்பல்லோவிடம்தான் கேட்க வேண்டும் என்று வனத்துறை திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் பற்றி பி எச் பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அப்பல்லோ மீது போட்டு அதிமுக தப்பிக்கப் பார்க்கிறது.
ஓபிஎஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும். அவரது மரணம் பற்றியும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
போயஸ் இல்லத்தில் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டு, காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதை தாம் கூறவில்லை என்றும், அப்பல்லோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை தான் தாம் இப்போது வெளி உலகிற்கு சொல்வதாகவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டத்தில் இருந்து பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட வேண்டும் என்று பாண்டியன் வலியுறுத்தினார். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டிலேயே சிசிடிவி கேமரா இருக்கின்றன. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும் என்று பாண்டியன் அவர் கோரியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளையும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட வேண்டும். ஜெயலலிதா எத்தனை மணிக்கு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்த காட்சிகளை மருத்துவமனை வெளியிட அவர் கோரியுள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கிருந்த 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த உத்தரவை பிறப்பித்த்து யார் என்றும் பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டால், ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.
இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்இ மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி தவறான தகவல்களை பரப்புவதாக பிஎச் பாண்டியன் மீது குற்றம் சாட்டியுள்ளார். அரசியலுக்காக ஜெயலலிதா மரணத்தை விமர்சிப்பது மனிதாபிமானத்துக்கு விரோதமானது என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உடல்நிலை அவருக்கு அளித்த சிகிச்சை விவரத்தை மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமராவை அகற்றியது குறித்து அப்பல்லோவிடம்தான் கேட்க வேண்டும் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். ஒருவழியாக அப்பல்லோ மீது பழியைப் போட்டு அதிமுக தப்பித்துக்கொண்டுள்ளது என்றே கூற வேண்டும்.