ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை குறித்து புதிய தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.
2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற புதிய தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
குறித்த தீர்மானத்தை பிரித்தானியாவே கொண்டுவரும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த முடிவில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இம்முறையும் அமெரிக்காவே இலங்கை தொடர்பாக தீர்மானத்தைகொண்டு வரும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜெனிவா மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவெல இதனை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்ற உபமாநாடு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார், அதன்படி, 2 ஆண்டுகள் கால அவகாசத்தை வழங்கும் தீர்மானத்தை இம்முறை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு பிரித்தானியா, மொன்ரனிக்ரோ உள்ளிட்ட நாடுகளுடன், இலங்கையும் இணை அனுசரனை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிய தீர்மானத்தின் ஊடதக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரகம் சம்பந்தபட்ட நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டுவருவதில் நீடித்திருந்த சர்ச்சைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நான்கு முறை அமெரிக்க தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், இம்முறையும் அமெரிக்காவே தீர்மானத்தை கொண்டுவரவுள்ளது.