இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவும் அவரது மனைவியும் சிறப்பு ஜெட் விமானத்தில் பயணிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜெனரல் சில்வா டெல்லியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் டெஹ்ராடூனுக்கு பயணிப்பதற்கு இந்திய விமானப்படை இந்த வசதியை செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
இந்திய இராணுவ கல்லூரியில் நடைபெற்ற அணிவகுப்பில் அவர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோதே இந்தப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது .
டெல்லிக்கான உத்தியோகபூர்வ விஜயம்
ஜெனரல் சில்வா தனது டெல்லிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அவர் டெல்லிக்கு சென்றடைந்தவுடன், டெஹ்ராடூனுக்கு ஜெட் விமானத்தில் பயணம் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன.
இதன்படி முக்கியஸ்தர்களுக்கான நிலையான நெறிமுறையின்படி, ஜெனரல் சில்வா, அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்த ஜெட் விமானத்தை இந்திய விமானப்படை தயார்ப்படுத்திக்கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.