எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார் அப்படத்தின் ஹீரோ பிரபாஸ். இப்படத்தின் பணிகள் முடிவடைந்தபிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார் என்றே சொல்லலாம். தற்போது, ‘பாகுபலி-2’ படத்தின் அனைத்துகட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரபாஸ் அடுத்ததாகவும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படத்திலேயே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்கவுள்ளார். படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என்று முன்பே செய்திகள் வெளியிட்டிருந்தார்கள்.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் ரூ.35 கோடி செலவிடப்போவதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ் சினிமாவில் ஒரு சண்டைக் காட்சிக்கு செலவழிக்கப்படும் அதிகபட்ச தொகை இது என்று கூறப்படுகிறது. இதில், நிறைய கார்களை வைத்து சேசிங் காட்சிகளாக உருவாக்கவிருக்கிறாராம். 20 நிமிடம் இந்த காட்சி இடம்பெறுமாம்.
இப்படத்திற்கு சங்கர்-எசான்-லாய் இசையமைக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் ஆர்ட் பணியை மேற்கொள்கிறார். மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாவதால் மூன்று மொழிகளுக்கும் நன்கு தெரிந்த நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.