புனேவில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூர் டெஸ்ட் அல்லது மேலும் உள்ள இரண்டு டெஸ்டுகளில் ஏதாவது ஒன்றை வென்று விட்டால் தொடரை கைப்பற்றி விடலாம் என்று ஆஸ்திரேலியா நினைக்கிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ‘‘இந்திய வீரர்கள் சற்று நெருக்கடியுடன் நாளை போட்டியில் களம் இறங்குவார்கள் என்று நினைக்கிறேன். இந்த தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியா 4-0 என வெற்றி பெறும் என்று எல்லோரும் சொன்னார்கள்.
தற்போது இந்தியா ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டிய சூழ்நிலையில் இந்தியா உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றாலே பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த விஷயம் விரைவில் இங்கே நடக்கும். பெங்களூர் பேட்டியில் ஒன்று அல்லலு இரண்டு செஷனில் நாங்கள் முன்னிலைப் பெற்றாலே போதும். இந்திய வீரர்கள் சுற்று நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என்பதை உறுதியாக கூறுகிறேன்’’ என்றார்.
இந்திய வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என்று ஸ்மித் கூறியதற்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘என்னை அல்லது எனது அணியை பார்க்கும்போது நெருக்கடிக்கு உள்ளானவர்கள் மாதிரியாகவா தெரிகிறது? நான் ரிலாக்ஷாகத்தான் இருக்கிறேன். அதேபோல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிரித்துக் கொண்டிருக்கிறேன். அவரது பார்வையில் எதுவேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆஸ்திரேலிய வீரர்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் எப்படி தயாராகி கொண்டிருக்கிறார்கள் என்பதை விட, எங்களுடைய திறமை மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். இதுபோன்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எப்படி மைண்ட் கேம்ஸ் விளையாடுவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
நான்கள் கடந்த இரண்டு ஆண்டுகள் விளையாடிய சிறந்த விளையாட்டுடன்தான் தற்போது வரை சென்று கொண்டிருக்கிறோம். நான்கு போட்டிகள் முடிந்த பின்னர்தான் தொடர் குறித்து பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அனைத்து வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஒரு வீரரை மட்டுமல்ல. அனைத்து வீரர்களுக்கும் எதிராக திட்டம் தீட்டுவோம்.
நமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாதது ஒரு விஷயம் அல்ல. அந்த நாள் ஆட்ட முடிவில் நாம் எவ்வளவு ரன்கள் எடுத்தோம் என்பதுதான் முக்கியம். நாம் ஒரு வீரருக்கு எதிராக மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இரண்டு முறை 10 விக்கெட்டுக்கள் வீழ்த்த வேண்டும்.
விமர்சனங்கள் பெரிய விஷயம் அல்ல. அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை’’ என்றார்.