இலங்கை பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு, ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகளை இந்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது.
உயர்நீதிமன்றத்தால் பதில் பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் மற்றும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக இதற்கான உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது.
ஒழுக்காற்று நடவடிக்கைகள்
சட்டமா அதிபர் மூலம் தீர்ப்பின் நகலை முறையாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு பெற்றவுடன் ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் செயல்முறை தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னாள் இராணுவ ஒருவர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பிலேயே உயர்நீதிமன்றம், தென்னக்கோன் உட்பட்டவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் குற்றம் சுமத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தமது சொந்தப்பணத்தில் 5 இலட்சம் ரூபாவை நட்டஈடாக செலுத்தவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி முதற்கட்ட விசாரணை நடத்த குழு ஒன்று நியமிக்கப்படும் அதன் பின்னர் சம்பவம் குறித்து ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை அந்த குழு சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீரிஹன பொலிஸில் பொறுப்பாளராக கடமையாற்றிய போது தேசப்பந்து தென்னக்கோனும் ஏனைய அதிகாரிகளும், திருட்டு குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மனுதாரரை சித்திரவதை செய்துள்ளனர். அவரது குடும்பத்தினர் முன்னிலையிலும், பொலிஸ் நிலையத்திலும் இந்த சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ளது.