ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் அவர் நடத்திய வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முறையான நடைமுறைகளை மீறி வீட்டுக் கடன்கள் போன்றவற்றை விநியோகித்ததாக குற்றம்சாட்டி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் விசாரணையை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
சஜித் பிரேமதாச அமைச்சராக இருக்கும் போது 42,610 வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுத்த போதும் 38,815 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையவில்லை என்றும் அவற்றை நிறைவு செய்ய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் காலத்தில் கட்டி முடிக்கப்படாத 38,815 வீடுகளுக்கு மேலதிகமாக 98,000 வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதாகவும் அதற்கு 24,000 மில்லியன் ரூபாய் தேவை என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.