வினாத்தாள் மதிப்பீட்டிற்காக வருகை தந்த ஆசிரியர்களினால், இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் இன்று (20.12.2023) காலை பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பெறுபேறுகளை மீள் மதிப்பீடு செய்வதற்காக வரவழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமையே இந்த பதற்ற நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தரக்குறைவாக நடத்தப்பட்டுள்ள ஆசிரியர்கள்
மேலும், வெளி மாகாணங்களில் இருந்து வினாத்தாள் மதிப்பீட்டிற்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு நேற்றிரவு வரை தங்குமிடம் மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
இதனால் சில ஆசிரியர்கள் தங்குமிட வசதிகளுக்காக பெருந்தொகை பணத்தை செலவழித்துள்ளதாகவும் மேலும் சில ஆசிரியர்கள் வினாத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்தும் விலகியுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அதுமட்டுமன்றி பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் தாங்கள் மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்போது, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் தலையீட்டினால் குறித்த பிரச்சினை தீர்க்கப்பட்டு ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.