கர்நாடகாவில் தமிழ் படங்கள் டப்பிங் செய்யப்பட்டும், நேரடியாக வெளிவந்தும் பெரிய வசூல் மழையை குவித்தன. இதனால், கன்னட படங்களின் வசூல் பெரிய அளவில் பாதித்தது. எனவே, டப்பிங் படங்களை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்ற தடை இருந்து வந்தது.
இந்த தடை கடந்த சில தினங்களுக்கு முன்னால் விலகியது. இதைத் தொடர்நது முதல் படமாக கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகி இருக்கிறது.
கர்நாடகாவில் 60 திரையரங்குகளில் திரையிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தாலும், பெங்களூருவில் மட்டும் இப்படம் எந்த திரையரங்குகளிலும் ரிலீசாகவில்லையாம். போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் ரீலீசாகவில்லை என்று ஒரு பக்கம் காரணம் கூறுகின்றனர்.
மற்றொரு பக்கம் நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜக்கேஷ் என்பவர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை திரையிட்டால் அந்த தியேட்டரை தீயிட்டு கொளுத்துவேன், இதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளதால் பெங்களூரில் இப்படத்தை திரையிடவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜக்கேஷின் இந்த பேச்சு திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 11-ந் தேதி போராட்டம் ஒன்றும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.