வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை தனது கடற்பகுதியில் செயற்பட அனுமதி வழங்குவதற்காக இலங்கை 12 மாத கால அவகாசம் விதித்துள்ளது.
சீனாவின் ஆராய்ச்சி மற்றும் உளவு கப்பல்கள் எந்த இலங்கை துறைமுகத்திலும் நிறுத்தப்படுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த மாதம் முதல் ஓராண்டு காலத்துக்கு அவகாசம் விதிக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக, அமைச்சர் அலி சப்ரியை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீன கண்காணிப்புக் கப்பல்களால் அடிக்கடி விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை சில திறன் மேம்பாட்டைச் செய்ய வேண்டியுள்ளது, இதன் மூலமே இதுபோன்ற ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சமமான பங்காளிகளாக இலங்கையும்; பங்கேற்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
நீர்நிலைப் பகுதியில் ஆராய்ச்சி
இந்த முடிவை இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவித்துள்ளதாக சப்ரி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் கடற்பரப்பில் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் நங்கூரமிடுவதற்கு சீனா அனுமதி கோரிய நிலையிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தனது ஆராய்ச்சி கண்காணிப்புக் கப்பல்களை இலங்கைக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் போர்க்கப்பலான Hai YANG 24 Hao இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்தது.
சீன ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக் கப்பல் ‘ஷி யான் 6’ இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அக்டோபரில் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து, இந்தியப் பெருங்கடலின் நீர்நிலைப் பகுதியில் இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்தியாவின் எதிர்ப்பு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீனாவின் போலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ‘யுவான் வாங் 5’ என்ற கப்பல் தொடர்பில் இந்தியாவிடம் இருந்து வலுவான எதிர்ப்புகள் காட்டப்பட்டன.
இந்தக் கப்பலின் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள், இந்திய பாதுகாப்பு நிறுவல்களை உற்று நோக்கும் சாத்தியம் குறித்து புது டெல்லி அச்சத்தை வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், கணிசமான காலதாமதத்திற்குப் பிறகு, சீன நிறுவனத்தால் கட்டப்பட்ட மூலோபாய தெற்கு துறைமுகமான ஹம்பாந்தோட்டையில் கப்பலை நங்கூரமிட இலங்கை அனுமதித்தது.
இந்தநிலையில் இலங்கையும் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ளது. எனவே புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் எந்தவொரு நாட்டையும் பகைத்துக்கொள்ளாத போக்கை இலங்கை கடைப்பிடிப்பதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.