சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய நான்கு வேட்பாளர்களில் ஒருவராக, தொழில் அதிபர் தம்மிக்க பெரேராவை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேற்படி தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
சாத்தியமான வேட்பாளர்
எவ்வாறாயினும், தம்மிக்க பெரேரா தற்போது சாத்தியமான வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ராஜபக்சர்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நல்லெண்ணம் குறைந்துள்ளமை மற்றும் நீதிமன்றினால் ராஜபக்சர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளமை என்பவற்றை கருத்திற்கொண்டே தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என ஊடகங்களில் செய்திகள் பல வெளியிடப்பட்டிருந்தன.
இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படுவதற்கு கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட வேண்டும் எனவும் அண்மையில் நிறைவேற்றுக் குழு கூடவில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.