எங்களது விவசாயிகளுக்காக வழங்கப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்கில் ஏற்பட்டுள்ள பக்டீரியா, பங்கஸ் தாக்கம் சம்பந்தமான பிரச்சினை ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பேசப்படுகின்றது.
இந்த உருளைக்கிழங்கு உண்மையிலே அவுஸ்திரேலியாவில் இருந்துதான் வந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட நவீனமயமாக்கல் செயல்திட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கத்தினுடைய தலைவர் செ.துஷ்யந்தன் தெரிவித்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாக்டீரியா தாக்கம்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஏற்கனவே விவசாயத் தொற்று ஏற்பட்டிருப்பதாக எமது கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலையம் மற்றும் திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு வழங்கினால் விவசாயிகளினுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதாவது இந்த உருளைக்கிழங்கின் மூலம் மண்ணில் ஏற்படும் பாக்டீரியா தாக்கம் ஏனைய பயிர்களையும் பாதிக்கும் என்று உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டது.
எங்களுடைய சங்கத்தில் உள்ள அங்கத்தவர்கள் அனைவரும் சேர்ந்து சென்று எமது களஞ்சியசாலையில் பார்வையிட்ட பொழுது அந்த கிழங்குகள் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது.
ஆகையால் இந்த கிழங்குகள் நமது விவசாயிகளுக்கு கொடுக்க பொருத்தமற்றவை என நாங்கள் முடிவு செய்தோம். 5000 கிலோ கிழங்குகள் அழுகிய நிலையில் காணப்பட்டன.
மிகுதி கிழங்குகள் வரும்போது ஒரு நிறத்திலும் பின்னர் வேறொரு நிறத்திற்கும் மாற்றம் அடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்தக் கிழங்குகள் உண்மையிலேயே அவுஸ்திரேலியாவில் இருந்துதான் வந்ததா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தால் அந்த கம்பெனியின் முகவரி யார்? இந்தப் பிரச்சினை ஆரம்பித்து பத்து நாட்கள் கடந்து விட்டன.
ஆனால் இன்று வரைக்கும் அந்த கம்பனியின் முகவரோ அல்லது அந்த கிழங்கினை கொண்டு வந்து எமது களஞ்சியசாலைக்கு வழங்கியவரோ இதுவரைக்கும் எம்மை வந்து சந்திக்கவில்லை.
கடந்த காலங்களில் பெட்டியில் தான் கிழங்குகள் எமக்கு கிடைக்கப்பெறும். இந்த முறை சாக்கிலேயே எமக்கு கிழங்குகள் வழங்கப்பட்டன.
அந்த சாக்கில் அடைக்கப்பட்ட முத்திரையில் தொலைபேசி இலக்கம் இல்லை, மின்னஞ்சல் முகவரி இல்லை, இணையதள முகவரி இல்லை, ஆதாரத்துக்கு எந்த ஒரு விடயங்களும் அதில் இல்லை.
நவீன மயமாக்கல் முறை
ஆகையால் இந்த கிழங்கானது எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எமக்கு எழுகின்றது. அடுத்ததாக இந்த கிழங்கானது சாதாரண ஒரு அளவில் வந்தால் தான் இதனை நாங்கள் நிலத்தில் புதைக்கலாம்.
நவீன மயமாக்கல் முறை செய்யத் திட்டத்தில் நாங்கள் நிலத்தில் புதைப்பதற்கு 2000 கன்றுகளுக்கு (அரை ஏக்கர் நிலம்) எங்களுக்கு 650 கிலோ கிழங்குகள் தேவை.
சிறிய அளவில் வந்தால் தான் நாங்கள் அப்படி விவசாய நிலத்தில் தாழ்க்க முடியும். எமக்கு வழக்குவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த கிழங்கின் அளவிற்கு வந்தால் 13 அந்தருக்கு பதிலாக 26 அந்தருக்கு மேற்பட்ட கிழக்குகள் தேவைப்படும்.
அவர்கள் வழங்குவதற்கு கொண்டு வந்த கிழக்கினைப்போல விதை கிழங்கினை நாங்கள் இதுவரை காணவும் இல்லை.
நவம்பர் மாதம் 17ஆம் திகதி வந்த கிழங்குகள் டிசம்பர் மாதம் 1ஆம் திகதிவரை களஞ்சியசாலையில் இருக்கும்.
அதாவது அந்த நிறுவனம் களஞ்சியசாலையில் வைத்து, அவர்களே அதனை பராமரித்து எங்களிடம் ஒப்படைக்கும் வரை களஞ்சியத்தில் இருக்கும்.
ஆனால் இதுவரை உத்தியோகபூர்வமாக யாருமே அந்த கிழங்கினை எங்களிடம் ஒப்படைகாகவில்லை.
டிசம்பர் 1ஆம் திகதி களஞ்சியசாலை திறப்பு எங்களது கைகளுக்கு வந்த பின்னர் நாங்கள் குறித்த கிழங்குகளை 12ஆம் திகதி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 11ஆம் திகதி களஞ்சியசாலையை திறந்தோம்.
அவர்களது களஞ்சியப்படுத்தல் காலம் முடிவடைந்தது 10நாட்கள் தான் அந்த கிழங்குகள் களஞ்சியசாலையில் இருந்தன. 11 நாள் பார்த்தவேளை கிழங்குகள் அழுகிய நிலையில் இருந்தன.
பங்கஸ் மற்றும் பக்டீரியா தாக்கம்
இந்நிலையில் நாங்கள் கிட்டத்தட்ட 200 வேலையாட்களை வேலைக்கு அமர்த்தி ஏழு நாட்களாக அந்த கிழங்குகளை தெரிந்தெடுத்தோம்.
வழமையாக வருகின்ற கிழங்குகள் மூன்று மாதங்கள் வரை களஞ்சியத்தில் இருக்கும். ஆனால் பழுதடைவதில்லை. கிழக்கு பழுதடைவதற்கு களஞ்சியசாலை காரணமாக இருக்க முடியாது.
ஏனென்றால் இதற்கு முன்னரும் நாங்கள் அந்த களஞ்சியசாலையை தான் பயன்பயுத்தினோம். யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விவசாய அமைச்சுக்கு, எமது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 500 விவசாயிகளுக்கு விதை கிழங்குகள் தேவை என கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு வழங்குவதற்கு விதைக்கிழங்குகள் கைவசம் இல்லை என அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு விவசாய அமைச்சினால் பதில் வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலளித்து ஒரு மாதத்திற்குள் இந்த கிழங்குகள் எமக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இல்லை என்று கூறப்பட்ட கிழக்குகள் திடீரென எவ்வாறு கிடைத்தது? இந்த கிழங்கில் ஏற்கனவே பங்கஸ் மற்றும் பக்டீரியா தாக்கம் இருந்ததனால் தான் எமது களஞ்சியசாலைக்கு வந்த பின்னர் அழுகியுள்ளது.
எனவே விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தில் யாரும் விளையாட வேண்டாம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.