இருதய நோய் காரணமாக நாட்டில் தினசரி ஐந்து சிறுவர்கள் இறப்பதாகவும் சிறுவர் வைத்தியசாலையில் போதிய வசதிகள் காணப்படாமையால் சத்திர சிகிச்சைகள் தாமதமடைவதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவ மனையின் இருதய நோய் நிபுணர் டாக்டர் துமிந்த சமரசிங்க அண்மையில் கவலையளிக்கக் கூடிய தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
மூவாயிரம் சிறுவர்கள் இருதய நோயாளிகளாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவர்களில் 1500 சிறுவர்களுக்கே சத்திர சிகிச்சையளிக்க முடிவதாகவும் ஏனையோர் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இவர்கள் காலவோட்டத்தில் உயிரிழக்கும் அவலம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
உண்மையிலேயே இந்த அவலநிலை காரணமாக எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.
சிறுவர் வைத்தியசாலையில் காணப்படும் இடவசதிப் பற்றாக்குறை காரணமாகவே தினசரி ஐந்து சிறுவர்கள் மரணத்தை எய்துகின்றனர்.
இதனை நிவர்த்திக்க அவசியமான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
இப்பெரும் குறைபாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு லேடி ரிட்ஜ்வே மருத்துவ மனை வளாகத்தில் புதிதாக பத்து மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலை இப்போது 90 மில்லியன் ரூபாவையே சேகரிக்க முடிந்துள்ளதாக டாக்டர் துமிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பணியை லிட்டில் ஹார்ட் மன்றத்தின் மூலம் பல்வேறுபட்ட அமைப்புகளின் உதவியுடன் தொடங்கியுள்ளது.
இக்கட்டிடத்தை முழுமையாக நிர்மாணிப்பதற்கு இரண்டு பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பெருந்துயரிலிருந்து எமது சின்னஞ்சிறுசுகளை மீட்டுப் பாதுகாக்கும் இப்பாரிய பணிக்கு சகலரும் இன,மத, மொழி பேதமின்றி ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும்.
சிறார்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டியுள்ளது.சிறார்கள் எதிர்நோக்கியுள்ள பேராபத்திலிருந்து அவர்களை விரைவாக மீட்டெடுத்தாக வேண்டும்.
மனிதப் பேரழிவுகள் இன்று நாளாந்தம் இடம்பெற்ற வண்ணமே உள்ளது. ஆனால் சப்தமின்றி அன்றாடம் மரணத்தைத் தழுவும் எண்ணிக்கை குறித்து நாம் கண்டு கொள்ளத் தவறுகின்றோம்.
ஆட்கொல்லி நோய் போன்று இருதய நோயும், புற்று நோயும் காணப்படுகின்றன. நாட்டில் இன்று பெரும் எண்ணிக்கையிலானோர் புற்று நோய்க்காளாகி மரணத்தின் எல்லைக்கே சென்று கொண்டிருக்கின்றனர். அதே போன்று இருதய நோயும் இன்று அதில் இணைந்து கொண்டுள்ளது.
சிறுவர்கள் என்பவர்கள் எமது நாட்டின் எதிர்கால மனித வளங்களாகும். அவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவரிலும் தங்கி இருப்பதை நாம் மறந்து விட முடியாது.
நாம் என்ன விலைகொடுத்தேனும் எமது இளைய சந்ததியைப் பாதுகாக்க வேண்டும்.
இக்கட்டடத்தை கட்டி முடிக்கத் தேவைப்படும் 20 கோடி ரூபாவை அவசரமாகத் திரட்டியாக வேண்டுமென்பதில் ‘லிட்ல் ஹார்ட்’ அமைப்பு முனைப்புக் காட்டி வருகின்றது.
உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இதற்கான பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
லிட்ல் ஹார்ட் அமைப்பின் எதிர்பார்ப்பு 2018 இறுதிக்குள் இக்கட்டடத்தை அமைத்து முடிக்க வேண்டுமென்பதாகும். அதற்கான கைங்கரியத்துடன் நாம் ஒவ்வொருவரும் கைகோர்க்க வேண்டும்.
இந்தச் செய்தியை நாடு தழுவிய மட்டத்தில் கொண்டு செல்ல வேண்டும் மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இதே போன்றுதான் இதற்கு முன்னர் மகரகம புற்று நோய் மருத்துவ மனையில் ஸ்கேனர் இல்லாததால் பல உயிர்களை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது.
அன்று கொழும்பிலுள்ள கதீஜா பவுண்டேசன் தலைவர் என்.எம். முஹம்மத் தனது மகனுக்கு புற்றுநோய் ஏற்பட்டதால் எதிர்கொண்ட மன வேதனை மற்றொரு தந்தைக்கு ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒரு பணியை ஆரம்பித்து குறுகிய காலத்தில் 20 கோடி ரூபாவை திரட்டி உரிய இயந்திரத்தைப் பெற்றுக் கொள்ள வழி செய்தார்.
அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பாரிய பணிக்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளார்.
இவ்வாறான நல்லெண்ணம் படைத்த பரோபகரிகள் இந்தச் சின்னஞ் சிறுசுகளின் உயிர்களை பாதுகாக்க அள்ளி வழங்கி உதவ வேண்டும்.
சர்வதேச மட்டத்திலும் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
இவ்விடயத்தில் பொறுப்பற்றவர்களாக நாம் இருந்துவிட முடியாது. எமது நாட்டு இளம் சந்ததி எனக்கூறுவது எமது பிள்ளைகளாகும்.
எமது குடும்பத்தில் ஒரு பிள்ளையை இழக்க நாம் ஒருபோதும் விரும்புவது கிடையாது. அதுபோன்றே இதனை பார்க்க வேண்டும்.
2018 என்பது கூட தாங்கக் கூடியதல்ல. நாளொன்றுக்கு ஐந்து உயிர்கள் என்றால் 2018 வரை ஒவ்வொரு நாளும் இந்த இழப்புகளை நாம் எதிர்கொள்ளத் தான் வேண்டுமா? என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
இந்த விடயத்தை தனியொருவரால் அல்லது அரசாங்கத்தினால் மட்டும் கையாள முடியாது. நாம் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவருக்கொருவர் பேச வேண்டும்.
நண்பர்களிடம், உறவுகளுடன் பேச வேண்டும். தொகை பெரியதோ, சிறியதோ எனப் பார்க்க முடியாது. முடிந்தளவு உதவ வேண்டும்.
இந்த நிதி திரட்டலை பாடசாலை மட்டத்துக்கும் கொண்டு செல்ல முடியும்.பாடசாலைகளில் ஒவ்வொரு பிள்ளையிடமும் எங்கள் சகோதரனை, தோழனைக் காப்பாற்ற உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்தால் போதும் நிச்சயமாக இந்த முயற்சியில் வெற்றி இலக்கை அடைய முடியும்.
எமது மக்கள் நல்லவர்கள், பரோபகாரிகள், நல்லெண்ணம் கொண்டவர்கள். நிச்சயமாக இலக்கு வைத்திருக்கும் திகதிக்கு முன்னதாக இந்தப் பாரிய பணியை வெற்றி கொள்ள முடியும்.
சின்ன உயிர்களைப் பாதுகாக்க இணைந்து உதவுவோம், ஆதரவளிப்போம்.