அருட்தந்தை சிறில் காமினி எதிர்கொண்ட சாலை விபத்து தொடர்பில், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சிரேஸ்ட பொலிஸ் அதிபராக இருந்தபோது, அவரிடம், கர்தினால் மல்கம் ரஞ்சித், உதவிக் கோரியதாக வெளியிடப்பட்ட கருத்து மறுக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸ் வெளியிட்ட இந்த கூற்றை சமூகத் தொடர்பாடலுக்கான பேராயர் ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்ற வகையில் அருட் தந்தை ஜூட் கிரிஷாந்த மறுத்துள்ளதுடன் இது பொய்யான குற்றச்சாட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கர்தினால் மல்கம் ரஞ்சித், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் அவ்வாறான உதவி கோரவில்லை என கிரிசாந்த தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கு விடுத்துள்ள சவால்
சாலை விபத்து இடம்பெற்ற தினத்துக்கு அடுத்த நாள் காலையிலேயே இந்த சம்பவம் தொடர்பில் கர்தினால் அறிந்துக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட அருட்தந்தை சிறில் காமினி, பாதிக்கப்பட்டவர்களுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தனிப்பட்ட ரீதியில் அவர் தென்னகோனுக்கு நன்றி தெரிவித்திருந்தார். எனினும் அமைச்சர் டிரான் அலஸ் சம்பந்தப்பட்ட வீதி விபத்தைத் தொடர்ந்து கர்தினால் தென்னகோனிடம் உதவி கோரினார் என்று கூறியிருந்தார்.
எனவே பொய்களை பரப்புவதை தவிர்க்குமாறு அமைச்சர் திரான் அலஸை கேட்டுக்கொள்வதாக ஜூட் கிறிசாந்த வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் நிரூபிக்குமாறு அமைச்சருக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.