பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. இலங்கை அரசாங்கம் உள்நாட்டு அரசியலை சமாளிப்பதற்கு பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
கூட்டு எதிர்க் கட்சியினர் ஆளும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அதேவேளை, சர்வதேச ரீதியில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையிலும் இப்போதைய அரசாங்கம் இருக்கிறது.
இந்நிலையில் மனிதவுரிமைகள் 34வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதில் இலங்கையின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், ஐ.நாவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இன்று வெளிவந்திருக்கும் அறிக்கையில், இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள அனைத்து தனியார் நிலங்களையும் முன்னுரிமை அடிப்படையில், மீளக் கையளிக்க வேண்டும்.
வர்த்தக மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளைத் தழுவி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறு கால நீதி தொடர்பாக கடப்பாடுகளை கால வரம்புடன் நிறைவேற்றுவதற்காக விரிவான ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டும்.
அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவைக்குச் சமர்ப்பித்துள்ள முன்னைய அறிக்கைகள் மற்றும் தற்போதைய அறிக்கையின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.
இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அல்லது தனியாக ஐ.நா மனிதஉரிமைகள் பொறிமுறைகளின் முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தெளிவான திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும்.
நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை வடிவமைக்கும் செயல்முறை, விடயத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும்.
உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தும், சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இந்தச்செயல்முறையில் அவருடன் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட சட்டவரைவுகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட, ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதிகளை இலங்கைக்கு அழைக்க வேண்டும்.
சித்திரவதை, பாலியல் வன்முறைக, ஏனைய மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்பட்டுள்ளன, அவை குறித்து விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும்,
மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான எல்லா வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும், பாதுகாப்புப்படைகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இராணுவம், புலனாய்வுப் பிரிவு, காவல்துறைக்கு தெளிவான உத்தரவுகள் பகிரங்கமாக விடுக்கப்பட வேண்டும் என்றும் முக்கியமான பல்வேறு உள்ளடக்கங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களும் இலங்கை விவகாரத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
ஆனால், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரன் இராஜதந்திர நடவடிக்கைகள் இலங்கைக்கு இன்னும் குறிப்பிட்ட சில கால அவகாசத்தை பெறுவதாகவே இருக்கிறது.
இதற்கிடையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலப்பு நீதிமன்றம் சாத்தியமில்லை என்று வெளிப்படையாக இன்றைய தினம் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேச நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவது குறிதது சாத்தியமான எந்த முடிவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இலங்கை விடையத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைனுக்கு மிகத் தெளிவாக இருக்கிறார். ஏனெனில், மனித உரிமை முன்னேற்றம் மற்றும் அதனை பாதுகாப்பது தொடர்பில் இலங்கைக்கு பல வழிகள் இருப்பதாகவும் இலங்கை அது விடயத்தில் ஆழமாக செல்கிறது எனவும் கூறியுள்ளார்.
எனினும் சரியான வழிமுறைகளை தெரிவு செய்யாது போனால் சிரமமான முறையில் பெறப்படட வெற்றியினை விரிவுப்படுத்த முடியாது போகும் என்று அவர் குறிப்பிட்டிருப்பதன் மூலமாக இலங்கையின் விவகாரத்தில் தெளிவான பார்வை உண்டு என்று அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் இந்தமுறை எப்படியேனும் கால அவகாசத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் வெளிவிவகார அமைச்சு முழுமூச்சோடு செயற்படுகின்றதாம்.