கோயிலில் எந்த பகவானை வணங்கும்போதும் நேருக்கு நேர் நின்று வணங்கக் கூடாது என்று கூறுவார்கள். முக்கியமாக சனி பகவானை வணங்கக் கூடாது என்று கூறுவார்கள். ஏன்?
நேருக்கு நேர் வணங்கும்போது தெய்வத்தின் சக்தியை நம்மால் எதிர்கொள்ள முடியாது என்பதால் அவ்வாறு கூறப்படுகிறது.
தெய்வ சக்தியை எதிர்கொள்ளும் சக்தி நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற தெய்வ வாகனங்களுக்கு மட்டும் உள்ளதாம். அதனால்தான், கோயில்களில் நேருக்கு நேர் இந்த தெய்வங்களின் சிலைகள் இருப்பதைப் பார்க்கலாம்.
இதுமாதிரியான தரிசனம் நவகிரங்களுக்கும் பொருந்தும். சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், சனீஸ்வரன் சன்னிதியில், சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்று கூறுவார்கள்.
நேருக்கு நேர் நின்றோ அல்லது அமர்ந்தோ சனியை தரிசிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.ராவணன் தனது அரியணைக்கு கீழே அமைக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் ஒரு நவகிரகத்தை தனது அடிமையாக வைத்து இருந்தான்.
அனைத்து கிரகங்களும், மேல் நோக்கி படுத்து இருக்க, சனி மட்டும் கீழ் நோக்கி படுத்து இருந்ததாம். அங்கேயும் சென்றார் நாரதர். நைசாக கொளுத்திப் போட்டார்.
”ராவணா, அனைத்து கிரகங்களும் மேல் நோக்கி படுத்து இருக்க இந்த சனி மட்டும் கீழ் நோக்கி படுத்து இருக்கிறது பாரு” என்றார்.
ஆத்திரம் முட்டியது ராவணனுக்கு. என்ன சனி, உனக்கு மட்டும் மேல் நோக்கி படுக்க முடியாதா? என்று கர்ஜித்தான். சனியும் நமக்கு என்ன, வீழ்ச்ச்சிக்கு தயாராகிவிட்டான் என்று நினைத்து மேல் நோக்கி படுத்தது.
சனியை மிதித்துக் கொண்டு ராவணன் படி ஏறும்போது சனியின் நெஞ்சை மிதித்தான். சனியின் பார்வை ராவணன் மீது விழ, விழ அவனுக்கு வீழ்ச்சியும் ஆரம்பமானது.
ஆதலால்தான் சனி பகவானை நேருக்கு நேர் நின்று தரிசனம் செய்யக் கூடாது என்று கூறுகின்றனர்.