போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான தகவல்களை வழங்குவதில் பொலிஸார் ஏன் தாமதம் காட்டுகின்றனர் என சட்டமா அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விசாரணை அறிக்கைகள்
மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை தமது திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்த விபரங்களை வழங்குவதில் பொலிஸார் மிகவும் மெத்தனமாக இருப்பதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் விசாரணை அறிக்கைகளை வழங்குவதில் பொலிஸார் தொடர்ந்து தாமதித்தால், பொலிஸாரின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்படும் என்று சட்டமா அதிபர் எச்சரித்துள்ளார்.