கொழும்பு துறைமுகத்தில் சீனா தலைமையிலான உத்தேச மையத்திற்கு வருமான வரி மற்றும் வட் வரி ஆகியவற்றில் 15 ஆண்டு விலக்குகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில், 2008 மூலோபாய அபிவிருத்தி திட்டங்கள் சட்டத்தின் கீழ், கொழும்பு துறைமுகத்தை தெற்காசியாவுக்கான தளவாட மையமாக மாற்றுவதே நோக்கமாகும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வர்த்தமானியின் ஊடாக அறிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானியின் படி, தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாடங்களை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நோக்க வாகனத்தில் 70 சதவீத பங்குகளை China Merchants Port Holdings Company Limited கொண்டுள்ளது.
துறைமுக அதிகாரசபை கொண்டுள்ள பங்குகள்
15 வீதத்தை இலங்கை துறைமுக அதிகாரசபை கொண்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதத்தை Access Engineering PLC கொண்டுள்ளது.
முதல் கட்டத்தில் முதலீடு (70 சதவீதம் கடன், 30 சதவீதம் முதலீடு) என்ற அடிப்படையில் 280 மில்லியன் டொலர்கள் அல்லது 91.2 பில்லியன் ரூபாய்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தத் திட்டமானது வடிவமைத்தல், கட்டமைத்தல், நிதியளித்தல், அபிவிருத்தி செய்தல், இயக்குதல், நிர்வகித்தல், பராமரித்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் என்பனவாகும். அத்துடன் இது துறைமுக அதிகாரசபையுடனான 50 வருட பொது-தனியார் கூட்டாண்மையாகும்.