ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
அனைத்துலகப் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதங்கள் உள்ளிட்ட சில விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை இந்த அறிக்கை, ஒப்புக் கொண்டிருந்தாலும், பல முக்கியமான விவகாரங்களில் அரசாங்கம் முன்னேற்றங்களை எட்டத் தவறியுள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்தல், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு அதிகார சபையை மறுசீரமைத்தல், வர்த்தக மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவ தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வருதல், உள்ளிட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் விவகாரங்களில், திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் கரிசனைகளையும் கூட்டமைப்பு பகிர்ந்து கொள்கிறது.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் போதிய முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை என்ற கரிசனையை கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்9க அரசாங்கம் காலவரம்புடன் கூடிய செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோருகிறது.
சில அடையாள வழக்குகளில், வழக்கமான நீதிமன்றங்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டிருப்பதானது, அனைத்துலகப் பங்களிப்புடன், கூடிய சிறப்பு நீதிமன்றம் ஒன்றின் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை இந்தக் கோரிக்கையைப் பிரதிபலித்திருக்கிறது.
இந்த நாட்டின் முன்னேற்றங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கிறது.
நல்ல நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டிய விடயங்களில் துரிதமான முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.