நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கையின் கீழ் 7 நாள்களுக்குள் 13 ஆயிரத்து 666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இவர்களில் 717 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், 174 பேர் தொடர்பில் சொத்து சம்பந்தமான விசாரணகள் முன்னெடுக்கப்படுவதாகவும், ஆயிரத்து 97 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி டிசம்பர் 17 முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையான 7 நாள்களுக்குள் 9 கிலோ 82 கிராம் ஹெரோயினும், 4 கிலோ 679 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 273 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.
யுக்திய சுற்றிவளைப்பு
இந்நிலையில், 9 இலட்சத்துக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
பண்டிகைக் காலத்தைக் கருத்தில்கொண்டு யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்குத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாளைமறுதினம் 27 ஆம் திகதி முதல் யுக்திய சுற்றிவளைப்பு முழு அளவில் நாடுபூராகவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.