புதிய இணைப்பு
பாதாள உலகக் குழு உறுப்பினர் தொன் ரொஷான் இந்திக்க எனப்படும் “மன்னா ரொஷான்” மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
பாதுக்க துந்தான, வெந்தேசிவத்த பிரதேசத்தில் வைத்து இன்று (25) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
“மன்னா ரோஷான்” மற்றும் அவரது உதவியாளரின் சடலங்கள் இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
போதைப்பொருள் விவகாரம்
போதைப்பொருள் விற்பனைக்காக இவர்கள் இருவரும் பாதுக்க துந்தான வெந்தேசிவத்தைக்கு சென்றுள்ளதாகவும், அங்கு சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள லலித் கன்னங்கரவிடம் இருந்து போதைப்பொருள் பெறுவதற்காகவே இவர்கள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், லலித் கன்னங்கரவின் வழிகாட்டுதலின் பேரில் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட மன்னா ரொஷான், ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
விசாரணைகள்
மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு வெடிகுண்டு ஒன்றை வைத்திருந்தமை மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய கொலை செய்யப்பட்ட அவரது உதவியாளர், களுஹக்கல சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சுபுன் நிமேஷ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இவர் அப்பகுதியில் இளநீர் விற்பனை செய்பவர் என பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தென் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயந்த மாரப்பனவின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
முதலாம் இணைப்பு
பாதுக்க – துன்தான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாதாள உலகக் குழு
இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது சகா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.