பிரான்சில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் அளித்த நத்தார் விருந்தில் உணவருந்திய 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனம், பயணிகள் போக்குவரத்து, இராணுவம் மற்றும் விண்வெளி பயன்பாட்டிற்கு விமானங்களை தயாரிக்கிறது.
நத்தார் விருந்து
இந்த நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டிலுள்ள கிளை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு நத்தார் விருந்தளிக்க நிறுவனத்தினர் முடிவு செய்திருந்த நிலையில் சுமார் 2600 ஊழியர்கள் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நத்தார் விருந்தானது, மேற்கு பிரான்ஸ் பகுதியில் லொய்ர்-அட்லான்டிக் (Loire-Atlantique) பிராந்தியத்தில் மாண்டார்-டி-ப்ரெடான் (Montoir-de-Bretagne) பகுதியில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த உணவகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் பல்வேறு உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளும் வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 700 ஊழியர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதுடன் சேர்த்து தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன.
பாதிப்படைந்த ஊழியர்கள்
இந்த விருந்தில் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு குடல் அழற்சி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதுடன் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து விமான தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “நாங்கள் விருந்து வழங்கிய அனைத்து உணவு மாதிரியையும் வைத்துள்ளோம். சுகாதார துறையுடன் விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.