‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம்.வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’- ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’. இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.
கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை, தற்போது ‘யு 1 ரெக்கார்டஸ்’ நிறுவனத்தின் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கி இருப்பது ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து யுவன் கூறியதாவது,
“`8 தோட்டாக்கள்’ படத்தின் பாடல்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன். தரமான பாடல்களை இசை பிரியர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் ‘யு 1 ரெகார்ட்ஸ்’ நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். அந்த வகையில் இந்த `8 தோட்டாக்கள்’ படத்தின் பாடல்கள் நிச்சயமாக ரசிகர்கள் விரும்பிக் கேட்கும்படி இருக்கும்” என்றார்.