மியன்மாரில் இலங்கையர்கள் குழுவொன்று இணைய அடிமைத்தனம் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல், மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு என்பன விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் தமக்கு கிடைத்த நான்கு முறைப்பாடுகளின் அடிப்படையில் மூன்று இலங்கையர்கள் மற்றும் சீன பிரஜை உட்பட 04 பேரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இணைய அடிமைகள்
மியன்மாரின் தீவிரவாத குழு ஒன்றின் முகாமில் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை இளைஞர்கள் இந்த அவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும், வெளிவிவகார அமைச்சு இதற்கு முன்னர் 32 இலங்கையர்களை பல சந்தர்ப்பங்களில் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது மியன்மாரின் இணைய அடிமைத்தனத்தில் இருக்கும் இலங்கையர்களை மீட்பதற்காக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே யங்கூனில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியை நாடியுள்ளது.
இதற்கிடையில் மியன்மார் தீவிரவாத முகாமில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர்களை விடுவிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில், தூதுவர் ஜனக பண்டார ஆறு நாடுகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஒன்றை அறிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு
இந்தியா, பூட்டான், பங்களாதேஸ் மியான்மர், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர்களை பத்திரமாக தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கு அயராது உழைத்து வருவதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா, பூட்டான், பங்களாதேஸ் மியான்மர், தாய்லாந்து மற்றும் நேபாளம் உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுடன் கலந்துரையாடியபோது, 200 க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களும் முகாமின் பிடியில் இணைய அடிமைகளாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சாத்தியமான முன்னேற்றத்தின் அடையாளமாக, சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது குறித்து விவாதிக்க மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தூதுவர் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை டுபாயில் இருந்து மியன்மார் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு முகாமுக்கு இலங்கையர்களை ஒரு குழு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.