இஸ்ரேல் இராணுவத்தின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டும் அகதிகளாகவும் வாழ வழியின்றியும் நிர்க்கதியாகி உள்ள காசா மக்களின் வேதனையிலும் கனடா அரசாங்கம் மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ளது.
இதன்படி “கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்து, எங்கள் நாட்டில் குடியேற தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்” என கனடா தெரிவித்துள்ளது.
கனடா குடிவரவு அமைச்சரின் அறிவிப்பு
ஆனால், “இஸ்ரேல் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காசாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது” எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டம் ஜனவரி 9-ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், நிரந்தமாக வசித்து வருபவர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்து வர அரசு கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்
கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பெற்றோர்கள், குழந்தைகள், பேரக்குழந்கைள் போன்றோரின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும்.
இதனால் எத்தனை பேர் கனடாவிற்கு வருவார்கள் எனத் தெரியாது. ஆனால் நூற்றுக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களை காசாவில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினமானது என்றார்.