நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுத்து, அந்த வளங்களை நாட்டின் தேசிய வருமானத்திற்குப் பயன்படுத்தி, மனித வளத்திற்காக முதலீடு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹபரன மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் குடும்பங்களின் வருமானம் 60 வீதமாக குறைந்துள்ள நிலையில், செலவின அளவு 90 விதமாக அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக 22 வீதமானோர் கடன் சுமையால் தவித்து வருகின்றனர்.
பாலர் பாடசாலை மட்டத்திலிருந்து பல்கலைக்கழக மட்டம் வரை கல்வியில் ஈடுபடும் 55 வீதமானவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் எதோச்சதிகாமாக வரிச்சுமையை அதிகரிப்பதாலேயே நாடு இந்நிலைக்கு வந்துள்ளது.
திருடர்களின் ஆணை பெற்று ஜனாதிபதி எடுக்கும் இவ்வாறான தீர்மானங்களை அங்கீகரிக்க முடியாது.
நல்லாட்சி அரசாங்கத்தின் சில தலைவர்கள் திருடர்களைப் பிடிக்காமல் திருடர்களைக் காப்பாற்றினார்கள்.
2015 ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் இருந்து திருடப்பட்ட வளங்களைக் தேடி நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியது.
திருடர்களை பிடிப்போம் என்று கூறிய தலைவர்கள் திருடர்களை காப்பாற்ற டீல் போட்டதால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இவ்வாறு நிறுத்தப்படாதிருந்தால், திருடப்பட்ட வளங்களை நாடு பெற்று மனித வளத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கலாம்.
நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுத்து, அந்த வளங்களை நாட்டின் தேசிய வருமானத்திற்குப் பயன்படுத்தி, மனித வளத்திற்காக முதலீடு செய்து ஸ்மார்ட் நாடு, ஸ்மார்ட் கல்வி, ஸ்மார்ட் மாணவர் தலைமுறையை உருவாக்கும் வேலைத்திட்டத்தை நாம் அமுல்படுத்துவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.