பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றைக்கண்டுபிடித்த இலங்கை தமிழர் ஒருவருக்கு பிரித்தானியாவில் விருது ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரான சபேசன் சிதம்பரநாதன் என்பவருக்கே King’s New Year Honors விருது வழங்கப்படவுள்ளது.
இவர் தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகள், வைத்தியசாலைகள், விமான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாரளர்கள் பயன்படுத்தும் இருப்பிட கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
உழைப்புக்கு கிடைத்த மரியாதை
”இந்த விருதை பெறுவதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ஒட்டுமொத்த குழுவின் கடின உழைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு கிடைத்த மரியாதையே இது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சபேசன் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் கற்றுச்சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றுள்ளார்.
இதனையடுத்து பிரித்தானியாவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று தனது இளநிலை பொறியியற் கல்வியை 2007ஆம் ஆண்டு நிறைவு செய்து இங்கிலாந்து அளவில் தெரிவான 18 முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்துள்ளார்.
மேலும், தனது முதுமாணிக் கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்திருந்தார்.
புதுமைகளை உருவாக்குதல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் இளவயதில் உயர்கல்வி கற்க இங்கு வந்தேன். எனக்கு வழிகாட்டியவர்கள் இல்லையென்றால், நான் இன்று இருக்கும் இடத்தில் இருந்திருக்க முடியாது .நான் மிகவும் திறமையான நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
புதுமைகளை உருவாக்குவது மிகவும் உற்சாகமானது, எனினும், ஆய்வகத்திலிருந்து நிஜ உலகிற்கு ஒரு யோசனையைக் கொண்டுவருவது என்பது உண்மையான சவாலாகும்” என்றும் சபேசன் சிதம்பரநாதன் கூறியுள்ளார்.