கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகத்திற்குரிய நீரை இரணைமடுக்குளத்தில் இருந்து நேரடியாக பெற்று சுத்திகரித்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு குடிநீர் பெற்றுக்கொள்ளும் கிளிநொச்சிக்குளமானது அதிகளவில் மாசடைந்து மனித பாவனைக்கு உதவாத நீராக காணப்படுகின்றது என தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அத்துடன் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதும் குறித்த நீர் விநியோகத்துக்கு பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பகுதிகளுக்கு போதிய குடிநீரை வழங்குவதற்கும் சுத்தமான பாதுகாப்பான நீரை வழங்குவதற்கும் ஏற்ற வகையில் இரணை மடுக்குளத்தில் இருந்து நேரடியாக நீரைப் பெற்று சுத்திகரித்து குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கிளிநொச்சி குளத்தில் இருந்து பெறப்படுகின்ற நீரானது சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதனால் அது சுத்திகரிக்கப்பட்டிருந்தாலும் அதில் ஒருவகை நாற்றம் உள்ளதாகாவும் நீரை பெற்றுக்கொள்ளும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது ”கிளிநொச்சி குளத்தை சூழ உள்ள பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் பாவனைக்கு உதவாத கழிவு பொருட்களும் விலங்கு கழிவுகள் அதிகளவிலே கொட்டப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பத்து வருடங்களுக்குள் சுமார் 126 இற்கும் மேற்பட்டோர் குறித்த குளத்தினை சூழவுள்ள நீரேந்து பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் அந்தப்பகுதிகளில் பாதுகாற்ற மலசல கூடங்கள் அமைத்துள்ளதனால் மலக்கழிவு நீரும் நிலத்தடி நீருடன் சேர்ந்து குளத்து நீருடன் கலக்கின்ற நிலை காணப்படுகிறது.
எனவே இரணை மடுக்குளத்தில் இருந்து நேரடியாக நீரைப் பெற்று சுத்திகரித்து குடிநீரை வழங்குவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.