எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஈபிடிபி ஆதரவு வழங்கும், தமிழ் வேட்பாளர் என்பது பயனற்ற கதை என கடற்றொழில் அமைச்சரும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமுமாகிய டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (1.1.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் வருடம் இறுதியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என நினைக்கிறேன்.
பொருளாதார வீழ்ச்சி
ஈபிடிபியை பொறுத்த வரையில் எங்களுடைய நிலைப்பாடு இன்று இருக்கக்கூடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.
ஏனெனில் எமது நாடு பொருளாதாரத்தில் அதலபாதாளத்திற்கு சென்ற போது அதேநேரம் வன்முறைகளும் தலை விரித்தாடிய போது எவரும் முன்வந்து நாட்டை பொறுப்பெடுக்க தயங்கிய போது இவர் தைரியத்தோடும் நம்பிக்கையோடும் முன் வந்தவர்.
அவர் பிரேக் டவுன் ஆகிய பேருந்து ஒன்றையே எடுத்திருந்தார். இன்று டிங்கரிங் செய்து ஓட வேண்டிய நிலைமையில் அது வந்துள்ளது.
மற்றபடி அனைத்தும் திருத்தப்பட்டு விட்டது. எனவே அவரோடு பயணிக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல்
தமிழ் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு என்பது இந்த நாட்டில் இல்லை.
ஆகவே, தென் இலங்கையில் வென்று வரக்கூடிய ஒரு வேட்பாளரை நாட்டை வழிநடத்தக் கூடிய வகையில் நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒருவருடனேயே நாம் பயணிக்க வேண்டும்.
அவருடனேயே நாம் பேசவும் வேண்டும். தமிழ் வேட்பாளர் என்பதெல்லாம் ஒரு பூச்சாண்டி கதைகளும் பயனற்ற விடயங்களும் தான். அதை நாம் ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்ளவில்லை என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.