முல்லைத்தீவு – சிராட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தினால் முற்றாக சேதமடைந்த பாலத்தினை புனரமைக்கும் பணியை அப்பகுதி மக்கள் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பாலத்தினை கிராம சேவகர் ஊடாக இன்றைய தினம்(01.01.2024) கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
புனரமைக்கும் பணி
கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் வடக்கு – கிழக்கு பிரதேசங்களின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன.
அத்துடன் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் இன்றும் நீரில் மூழ்கியுள்ள நிலையிலேயே காணப்படுகின்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவானது வெள்ள நீரினால் சூழப்பட்டிருந்த நிலையில் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெள்ள நீர் வழிந்தோடியதுடன் குறித்த கிராமத்திற்கான போக்குவரத்து சுமூகமான நிலைக்கு திரும்பியிருந்தது.
எனினும் அந்த பகுதியில் சிராட்டி குளமானது மேலதிக நீரினை வெளியேற்றிய நிலையில் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காணப்பட்டிருந்த பாலமானது முற்றாக சேதமடைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து குறித்த பாலத்தினை புனரமைக்கும் பணியை இன்று(01) ஆரம்பித்துள்ளனர்.