பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிக்காயவின் அனுநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் குழு தொகுத்த “இமயமலைப் பிரகடனம்” என்ற ஆவணம் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் கருத்து அல்லவென அந்த சங்க சபையின் உதவிப் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில், கடந்த வருடம் டிசம்பர் 8ஆம் திகதி, உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்த பிக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்திருந்தார்.
இந்நிலையில், அந்த பேரவை, சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி, அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தேரர்கள் இணைந்து உருவாக்கிய, அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனத்திற்கு” உற்சாக வரவேற்பு அளித்தார்.
இமயமலைப் பிரகடனம்
மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை.
அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
2008இல் குறைந்தது 40,000 மரணங்கள் மற்றும் 20,000 நிராயுதபாணிகள் காணாமல் ஆக்கப்பட்ட, யுத்தத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பு என்ற பெயரிலான அமைப்பின் தேரர்கள் மற்றும் உலகத் தமிழர் பேரவையை சந்தித்ததோடு, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களும் இமயமலை பிரகடனத்தை ஏற்றுக்கொண்டிருந்தன.
கடுமையான நிராகரிப்பு
இமயமலை பிரகடனம் என்ற ஆவணம் ஏற்கனவே இலங்கைத் தமிழர்களாலும் பல புலம்பெயர் தமிழ் குழுக்களாலும் கடுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
கூட்டு இமயமலைப் பிரகடனத்தை கையளித்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இணக்கமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கைக்கான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியமான முன்னேற்றம் எனக் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும், உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்த பிக்குகளால் முன்வைக்கப்பட்ட கூட்டு இமயமலைப் பிரகடனம் குறித்து தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளதாக, அமைச்சின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்
கூட்டுப் பிரகடனத்தை கையளிப்பதற்காக, சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி, அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க வண. மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீதித்துறை சங்க நாயக்க வண. சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் ஆகியோர் ஆகியோர் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், மேல் மாகாணத்தின் பிரதான சங்க நாயக மற்றும் ஸ்ரீ தர்மரக்ஷித பிரிவின் பதிவாளர் வண. கிதலகம ஹேமசார தேரர், வஜிரவங்ச பிரிவின் பதில் மகாநாயக்க பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித அபிவிருத்தி ஆய்வு மையத்தின் தலைவருமான வண, களுபஹன பியரதன தேரர், மத்திய மாகாணத்தின் பாததும்பர பிரதம சங்க நாயக வண. நாரம்பனாவே தம்மாலோக தேரர், ராமன்ய நிகாயவின் பிரதிப் பதிவாளர் வாந்துவே தம்மவங்ச தேரர்களும் கலந்தக்கொண்டதாக கூறப்படுகிறது.