- நீதி வழங்கும் விடயத்தில் கவலைக்குரிய தாமதம்
- நீதி வழங்கும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை
- நல்லிணக்க செயலணி முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்
- ஐ.நா. தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டும்
- ஐ.நா. விசேட நிபுணர்களை அழைக்கவேண்டும்
- செயலாளர் நாயகத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்
- சித்திரவதைகள் பழிவாங்கல்கள் நிறுத்தப்படவேண்டும்
- தனியார் காணிகளை விடுவிக்கவேண்டும்
- இராணுவம் சிவில் நடவடிக்கைகளிலிருந்து விலக வேண்டும்
- பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்
- தடுப்பில் உள்ளவர்களை விடுவியுங்கள் அல்லது விசாரியுங்கள்
- காணாமல் போனோர் அலுவலகம் இயங்கவேண்டும்
- உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அவசியம்
- நட்டஈடு வழங்கும் கொள்கை அவசியம்
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு நீதிமன்றப் பொறிமுறையின் ஊடாக சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர், வழக்குரைஞர்களை உள்ளீர்த்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதற்கு ஏற்றவாறு சட்டமூலங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு மீண்டும் ஒருமுறை பரிந்துரை செய்திருக்கின்றார்.
அத்துடன் ஐ.நா.மனித உரிமை பேரவையின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் அமைத்து இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் செயிட் அல் ஹூசைன் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை குறித்த எழுத்து மூல அறிக்கையை சமர்ப்பித்துள்ள மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இந்த பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றார்.
ஐந்து கட்டமைப்புக்களின் கீழ் பல்வேறு பரிந்துரைகளை இலங்கை அரசாங்கத்திற்கும் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் உறுப்பு நாடுகளுக்கும் செயிட் அல் ஹூசைன் முன்வைத்திருக்கின்றார்.
அவர் அந்தப் பரிந்துரைகளில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
இலங்கையின் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நல்லிணக்க விடயத்தில் சில பயனுள்ள வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுகின்றேன்.
அத்துடன் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்துடன் பயனுள்ள ஈடுபாட்டை கொண்டுள்ளமை தொடர்பாகவும் பாராட்டுகின்றேன்.
குறிப்பாக மனித உரிமை மீறல்கள் விடயத்தை ஆராயும் விடயத்தில் இலங்கை ஒரு மாற்றுப்போக்கை கடைப்பிடிக்கிறது.
சில ஆரோக்கியமான முன்னேற்றங்களை மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் காட்டியிருக்கிறது. எவ்வாறெனினும் நிலைமாறுகால நீதி விடயத்தில் கவலைக்குரிய வகையிலான தாமத நிலைமை தொடர்கின்றதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
அதுமட்டுமன்றி விசாரணை பொறிமுறை விடயத்தில் அண்மைக்காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
அரசாங்கம் 2015ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட ஐ.நா. பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதை உலக நாடுகள் பாராட்டியிருந்தன.
அந்த வகையில் உண்மையைக் கண்டறியும் விடயத்தில் உணரக்கூடிய வகையிலான முன்னேற்றங்களை விரைவாக அரசாங்கம் தாமதமின்றி ஏற்படுத்த வேண்டியுள்ளது.
நம்பிக்கையை கட்டியெழுப்புவதும் இந்த விடயத்தில் அவசியமானதாகும். நல்லிணக்க பொறிமுறையை வடிவமைப்பதற்கான ஆலோசனை செயற்பாடுகள் வரவேற்கத்தக்கனவையாகும்.
அது அனைத்தும் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்டது. அதன் பங்களிப்புத் தன்மை மற்றும் செயற்பாட்டுத் தன்மை என்பன வரவேற்கத்தக்கன. அதில் உருவாக்கப்பட்ட விடயங்களை அரசாங்கம் தழுவிக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
குறிப்பாக நிலைமாறு கால நீதிக்கான பொறிமுறையை உருவாக்குவதில் இந்த நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நல்லிணக்க பொறுப்புக்கூறல் பொறிமுறையை வடிவமைக்கும் செயற்பாடு தாமதமாகவுள்ளது. எனவே இந்த விடயத்தில் நல்லிணக்க பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதில் அரசாங்கம் தெளிவான முன்னேற்றங்களை விரைவாக வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும்.
அந்தவகையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் நெருக்கமான வகிபாகத்தை வகிக்கவேண்டியது அவசியமாகும்.
அந்தவகையில் இலங்கை விடயத்தில் மிகவும் நெருக்கமான ஈடுபாட்டுடனும் தொடர்ச்சியான கண்காணிப்புடனும் ஐ.நா. மனித உரிமை பேரவை செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
அரசாங்கத்திற்கான பரிந்துரைகள்
நல்லிணக்க செயலணி முன்வைத்த நல்லிணக்கப் பொறிமுறைக்கான பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
2015ம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவது தொடர்பாக கால அட்டவணையின் அடிப்படையிலான பரந்துபட்ட திட்டமொன்றை முன்வைக்க வேண்டும்.
இலங்கை மக்கள் மத்தியில் நல்லிணக்க பொறிமுறைக்கான அவசியம் தொடர்பில் அரசாங்கம் பிரசாரமொன்றை முன்னெடுக்கவேண்டும்.
கால அட்டவணைக்கு ஏற்பட இந்த பிரசார செயற்பாடு முன்னெடுக்கவேண்டும்.அதுமட்டுமன்றி நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை முன்னெடுப்பதற்கான பாதிக்கப்பட்ட மக்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் துறையினருடனும் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் அமைத்து மனித உரிமை நிலைமைகளை கண்காணிப்பதற்கு இலங்கை அரசாங்கம் வழிசெய்யவேண்டும்.
அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்கைக்கு பிரேரணையில் குறிப்பிட்டுள்ளவாறு தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.
உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல்,நட்டஈடு வழங்குதல், மீள் நிகழாமையை உறுதிப்படுத்துதல் ஆகியவை தொடர்பான ஐ.நா. விசேட நிபுணர்களை இலங்கை அழைக்க வேண்டும்.
மேலும் தொடர்புபட்ட அனைத்து ஐ.நா. விசேட நிபுணர்களையும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதிகளையும் இலங்கை அரசாங்கம் அழைக்க வேண்டும்.
நிறுவன ரீதியான மறுசீரமைப்புமுப்படைகளின் அனைத்துக் கிளைகள், உளவுத்துறை, மற்றும் பொலிஸ் ஆகியோருக்கு இலங்கை அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
அதாவது சித்திரவதை, பாலியல் வல்லுறவு, மனித உரிமை மீறல்கள் என்பன தடைசெய்யப்பட்டள்ளதாகவும் அவை முன்னெடுக்கப்பட்டால் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தல் விடுக்க வேண்டும்.
மனித உரிமை காப்பாளர்கள், பாதிக்கப்ட்டோர், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மீதும் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுக்கும் அனைத்து வகையிலான கண்காணிப்புக்கள் சித்திரவதைகள் பழிவாங்குதல் என்பவற்றை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.
பாதுகாப்புத்துறையில் ஏனைய மறுசீரமைப்புக்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக பொறுப்புக்கூறல் முறையைப் பலப்படுத்தவும் இதனை முன்னெடுக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி ஐ.நா. அமைதிப்படை செயற்பாடுகளுக்காக விண்ணப்பிக்கும் தனிப்பட்டவர்களை முழுமையாக சோதனைக்குட்படுத்த வேண்டும்.
இராணுவம் கையகப்படுத்தியுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுமட்டுமன்றி இராணுவத்தினர் வர்த்தக மற்றும் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் விலக வேண்டும்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுத்து அதன் செயற்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
சட்டம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புசுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான ஐ.நா. விசேட ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தை மீளாய்வு செய்யவேண்டும். ஜெனிவா பிரகடனங்கள் மற்றும் ரோம் பிரகடனங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யுத்தக்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்களை அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் உள்ளீர்க்க வேண்டும்.
நிலைமாறு கால நீதிப்பொறிமுறையை உருவாக்கும்போது அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு நீதிமன்றப் பொறிமுறையின் ஊடாக சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர், வழக்குரைஞர்களை உள்ளீர்த்து விசாரணை நடத்தப்படவேண்டும்.அதற்கு ஏற்றவாறு சட்டமூலங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
டி.என். ஏ. பரிசோதனை, தடையவியல் பரிசோதனை என்பவற்றைப் பலப்படுத்தவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ள சட்டமானது சர்வதேச தரத்திற்கு அமைய வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறவர்கள் விடுவிக்க வேண்டும் அல்லது விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
காணாமல்போனோர் அலுவலகத்தை உடனடியாக இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும்.
அரசாங்கம் தேசிய நட்டஈடு வழங்கும் கொள்கைத் திட்டம் ஒன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.
பொறுப்புக்கூறல் பொறிமுறை சர்வதேச தரத்திற்கு அமைய இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையின் மனித உரிமை விடயத்தில் மனித உரிமைப் பேரவை கண்காணிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
அத்துடன் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றை சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் விசாரிப்பது குறித்து ஆராய வேண்டும்.