மார்பகப் புற்றுநோய் ஆண்களையும் தாக்கும் என்பது அதிர்ச்சியான தகவல் என்றாலும் வாய்ப்புகள் உள்ளது என்பதே மருத்துவர்கள் கூறும் பதில்.
இதில் அச்சப்படாமல் ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது என்னவெனில் இந்த மார்பகப் புற்றுநோய் இருநூறு ஆண்களில் ஒருவருக்கே வரும் என்பது தான்.
வேறுபாடு
பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய்க்கும் ஆண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய்க்கும் அதிகம் வித்தியாசமில்லை.
அதே போன்ற அறிகுறிகள், மேமோகிராம் பரிசோதனை, கதிரியக்கம், கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகள், அதே மருந்துகள்…
ஆனால், ஒரு சின்ன வேறுபாடு…
பொதுவாகப் பெண்களுக்கு 45 வயதுக்கு மேல் மார்பகப் புற்றுநோய் வரும்; ஆண்களுக்கு 55 வயதுக்கு மேல் வரும்
புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தில் ஓர் ஆணுக்கு மரபியல் காரணங்களால் வரும்.
உடல் பருமன் உள்ள ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு. இன்று ஸ்டீராய்டு ஊசிகள், மாத்திரைகள் என்று தவறான வழிகளில் உடல் கட்டமைப்பைப் பெற இளைஞர்கள் முயற்சிக்கிறார்கள்.
இதனால், ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் ஹார்மோன் சுரப்பு அதிகமாகி இவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும். தவிர, கதிரியக்க சிகிச்சைகள், பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் கோளாறுகளாலும் வரலாம்.
ஆண்களின் மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்குத்தான் வரும் என்றே பலரும் நினைக்கிறோம். அதனால், ஆண்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. மார்பில் கட்டியே இருந்தாலும் அதை அலட்சியப் படுத்தி விடுவார்கள்.
அலட்சியத்தின் விளைவாக மார்பகப் புற்றுநோய் இறுதிக்கட்டத்துக்கு வந்த பிறகே பல ஆண்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
கட்டி இருந்தாலும் வெளியே சொல்வதற்கு சங்கடப்பட்டு சொல்லாமல் இருப்பவர்களும் உண்டு. ஆனால், புற்றுநோயை எவ்வளவு விரைவில் கண்டுபிடிக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.
எச்சரிக்கை
பெண்களின் மார்பகப் புற்றுநோயை விட வேகமாக உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவக் கூடியது ஆண்களின் மார்பகப் புற்றுநோய்.
அதனால், மார்பில் கட்டி தென்பட்டாலோ, வலி இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.
மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். கண்டு பிடித்த பிறகு, சிகிச்சை எடுத்துக் கொள்வதில் பெண்கள் காட்டுகிற அக்கறை, ஆண்களிடம் இல்லை என்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
எப்படி தடுக்கலாம்
- உடற்பயிற்சிகள் செய்வது
- உடல் எடையை சரியாகப் பராமரிப்பது
- தேவையற்ற ஹார்மோன் ஊசிகள்
- புரோட்டீன் பவுடர்கள் பயன்படுத்தாமல் இருப்பது
போன்றவற்றின் மூலம் இந்த அபாயம் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்.