மிகப் பெரிய ஆச்சர்யம்தான்… 22 ஆண்டுகள் கழித்து நேற்று மீண்டும் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்துக்கு கூடிய கூட்டமும், அவர்களின் கொண்டாட்டமும் தமிழ் சினிமா என்றல்ல.. இந்திய சினிமாவுக்கே மிகப் பெரிய ஆச்சர்யம்தான்! பாட்ஷாவை டிஜிட்டலில் புதுப்பித்து, ஒலி, ஒளித்தரம் மாற்றி, புதுப் பின்னணி இசைச் சேர்த்து நேற்று உலகெங்கும் வெளியிட்டனர்.
தமிழகத்தில் பாட்ஷாவுக்கு அதிரவைக்கும் ஓபனிங் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை டிவியிலும் டிவிடியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பலரும் பார்த்திருந்தாலும், மீண்டும் தியேட்டருக்குப் போய் முதல் நாள் காட்சிகளைப் பார்க்க பெரும் ஆர்வம் காட்டினர். சென்னை மற்றும் செங்கல்பட்டில் பாட்ஷாவை 75-க்கும் அதிகமான அரங்குகளில் திரையிட்டிருந்தனர்.
அத்தனை அரங்குகளுமே ஹவுஸ்ஃபுல் அல்லது 80 சதவீத பார்வையாளர்களுடன் உற்சாகமாகக் காணப்பட்டன. பொன் விழா காணும் சத்யா மூவீஸ் நிறுவனம், அதைக் கொண்டாடும் விதத்தில் ஒரு புதிய படத்தை எடுத்து வெளியிட்டிருந்தால் கூட இந்த அளவுக்கு வசூலோ வரவேற்போ இருந்திருக்காது என்பதே ‘பாக்ஸ் ஆபீஸ் டாக்’!