ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளகப் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கமானது இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது.
ஆனாலும் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணைக்கு அரசாங்கமானது இன்னமும் உடன்படவில்லை.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான பிரேரணை மீது உரையாற்றிய வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையை முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டபோதிலும் சர்வதேச நீதிபதிகளை விசாரணையில் உள்ளடக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்நாட்டில் நடைபெற்ற பல கூட்டங்களில் ஆணித்தரமாக தெரிவித்திருந்தார்.
அதேபோன்றே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஆனாலும் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவையும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வந்தன.
தற்போது ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் இடம்பெற்று வருகையில் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் அரசாங்கமானது தனது பொறுப்புக்கூறும் செயற்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தநிலையில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா. செயலாளர் என்டோனியோ கட்ரஸ், ஐ.நா. மனித மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
இதனைவிட இலங்கையின் சார்பில் உப குழுக்கூட்டத்தையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் நடத்தியுள்ளனர். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனை சந்தித்துள்ள வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கத்திற்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகின்றது.
மனித உரிமை பேரவையில் நடத்தப்பட்ட உப குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகள் இடம்பெற்றாலும் இடம்பெறாவிட்டாலும் நம்பகரமான பொறிமுறை விசாரணையை முன்னெடுத்து நாங்கள் நீதியை பெற்றுக் கொடுப்போம். காணாமல் போனோர் அலுவலகம் விரைவில் ஆரம்பிக்கப்படும். இலங்கையில் போர்க்குற்ற விசாரணையை விசாரிப்பதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்காக சட்டத்தில் ஒருபோதும் மாற்றங்கள் கொண்டுவரப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணை இடம்பெறவேண்டுமென்று தமிழ் தரப்பினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கமோ அந்த விடயத்தில் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுச்சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பவற்றின் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு வகையிலும் இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் வருவதற்கு நான் இடமளிக்க மாட்டேன். அண்மையில் மனித உரிமை மீறல் குறித்து விசாரிப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கைக்கு வரவேண்டுமென ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரிய போது, 24 மணி நேரத்திற்குள் அதற்கு அனுமதிக்க மாட்டேன் என நான் அவருக்கு பதிலளித்திருந்தேன் என்று கூறியுள்ளார்.
எந்தக் காரணத்திற்காகவும் சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன் என்று அவரிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளேன் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதிலிருந்து சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணை ஒருபோதும் இடம்பெறப் போவதில்லை என்பது நிரூபணமாகின்றது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் இடம்பெற்று வருகையில் அதில் கலந்து கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கும் கருத்துக்களும் ஜனாதிபதி மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் தெரிவித்துள்ள கருத்துக்களும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நன்கு பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளன.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கமானது பொறுப்புக்கூறும் செயற்பாட்டை மேற்கொள்ளும் என்று இலங்கை வந்திருந்த ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் பான்கீ மூனிடம் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.
ஆனால் அன்றைய அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் அக்கறை செலுத்தாமையினால் 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு 2014ம் ஆண்டுகளிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு சர்வதேச விசாரணையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்தே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஐ.நா. மனித உரிமை பேரவையானது பொறுப்புக்கூறும் விடயத்தில் கால அவகாசம் வழங்கியிருந்தது.
இதனையடுத்தே ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறையின் அவசியம் குறித்து ஆணையாளர் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளதுடன் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது
.இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய நல்லாட்சி அரசாங்கமானது தற்போது 15 மாதங்கள் முடிவடைந்து விட்டபோதிலும், விசாரணைக்கான பொறிமுறையைக் கூட இன்னும் அமைக்காத நிலை காணப்படுகின்றது.
காணாமல்போனோர் குறித்து ஆராய செயலகம் அமைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் அதனை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சர்வதேச நீதிபதிகள் விடயத்திலும் அரசாங்கமானது வாக்குறுதிகளை மீறியே செயற்பட்டு வருகின்றது.
அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தற்போது அதற்காக மேலும் இரண்டு வருடகால அவகாசத்தை கோரி நிற்கின்றது.
உள்ளக விசாரணைக்கான பொறிமுறையினை ஆரம்பித்து அதனை செயற்படுத்தியிருந்தால் அரசாங்கம் கால அவகாசம் கோருவது நியாயமான நடவடிக்கையாக நோக்கப்பட்டிருக்கும்.
ஆனால் எத்தகைய நடவடிக்கையினையும் எடுக்காத நிலையில் வாக்குறுதிகளையும் மீறிவிட்டு கால அவகாசத்தை கோருவதானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால்தான் கால அவகாசம் வழங்கியும் எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை என்ற நிலைப்பாடு மேலோங்கி வருகின்றது.
எனவே அரசாங்கமானது இனியும் இழுத்தடிப்புப் போக்குகளை கடைப்பிடிக்காது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க முன்வர வேண்டும்.