தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மாப் குச்சியை வைத்து நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை
தமிழக மாவட்டமான காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 1000 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் வருகின்றனர்.
இந்த அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவ பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளது.
குறிப்பாக, வைரஸ் காய்ச்சல், டெங்குகாய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்புடைய காய்ச்சல் என்று வருபவர்களுக்கு தனி தனி வார்டுகள் இல்லாததால் பொது வார்டில் இருப்பவர்களுக்கும் தொற்று ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் படுக்கைக்கு அருகில் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டான்ட் பொருத்தப்படாமல் உள்ளது. அதனால், தரையை துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியை கட்டிலுடன் சேர்த்து கம்பி வைத்துக் கட்டி ஸ்டாண்டாக பயன்படுத்துகின்றனர்.
மேலும், சில இடங்களில் ஸ்விட்சுகள் சரியாக இல்லாததால் நோயாளிகளுக்கு மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் ஏற்றப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.