உலகளவில் வலுவான மற்றும் பலவீனமான கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற கடவுச்சீட்டுகள் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், சிங்கப்பூர மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்டுள்ளது.
இந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் 194 நாடுகளுக்கு எளிதாகப் பயணம் செய்யலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் கொண்டிருந்த நிலையில், தற்போது ஐரோப்பிய நாடுகளும் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி எளிதாகப் பயணம் செய்யலாம் என ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அஸ்திரியா, டென்மார்க், ஐயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இந்த வரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.
இதன்படி. குறித்த நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு செல்ல முடியும்.
அத்துடன், பெல்ஜியம், லக்ஸம்பேர்க், நோர்வே, போர்த்துக்கல் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த பட்டியிலில் நான்காவது இடத்தை பிடித்துள்ள நிலையில், கிரேக்கம், மால்டா மற்றும் ஸ்விஸர்லாந்து ஆகிய நாடுகள் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.