தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், பணம் கிடைத்துள்ளதாக கூறி மோசடி செய்த செய்த குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு , தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் , தன்னை தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றின் பிரதிநிதி என கூறி , தங்கள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் , உங்களுக்கு பெருந்தொகை பணம் விழுந்துள்ளது.
அந்த பணத்தினை பெற வரியாக 18 இலட்ச ரூபாயை செலுத்த வேண்டும். 18 இலட்ச ரூபாயை செலுத்தினால் , பரிசு பணத்தினை பெற முடியும் என கூறி, கணக்கிலக்கம் ஒன்றினையும் வழங்கியுள்ளார்.
அதனை நம்பிய நபர் குறித்த கணக்கு இலக்கத்திற்கு 18 இலட்ச ரூபாய்பணத்தினை வைப்பிலிட்டுள்ளார். அதன் பின்னர் தன்னுடன் தொடர்பு கொண்ட இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது , அந்த இலக்கம் செயலிழந்து காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து , குறித்த தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு சென்று , விசாரித்த போதே , தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , தென்னிலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான மற்றுமொரு நபரை, மோசடிக்கு துணை போன குற்றச்சாட்டில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.