போடா வெளியே என யாழ். மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தைத் திட்டிய சம்பவம் இன்று சனிக்கிழமை(04) யாழில் இடம்பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை(04) யாழ்.விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்குத் தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் போனவர்கள் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வலி.வடக்கு மக்களின் காணி விடுவிப்பு என்பவற்றை வலியுறுத்தியும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகஏ-9 வீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடாத்தினார்.
பலத்த பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரின் பாதுகாப்பையும் மீறி வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மக்கள் ஏ – 9 வீதியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தனர்.
இதன் போது மக்கள் “காணாமற் போனவர்கள் எங்கே”, “பதில் சொல் பதில் சொல் ஜனாதிபதியே பதில் சொல்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களையும் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணி ஆரம்பித்து சற்று நேரத்தில் அவ்விடத்திற்கு வருகை தந்த யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பட்டதாரிகள் இங்கு அமைதி வழியில் போராடி வருகின்றனர் . எனவே, பேரணி நடாத்துவது ஏற்கக் கூடிய விடயமல்ல எனத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த சிவாஜிலிங்கம் ‘அது வேற பிரச்சினை….இது வேறு பிரச்சினை’எனத் தெரிவித்துள்ளார். பின்னர் பேரணி நடாத்த வேண்டாம். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த போதும் பேரணி தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏ -09 வீதியில் வீதியின் நடுவே சிவாஜிலிங்கம்உள்ளிட்டவர்கள் அமர்ந்திருந்து வீதி மறியலிலும் ஈடுபட்டனர். வீதிமறியலில் ஈடுபட்ட போது மீண்டும் அங்கு வருகை தந்த யாழ். மாவட்ட சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் சிவாஜிலிங்கத்துடன் முரண்பட்டுள்ளார்.
சிவாஜிலிங்கத்தை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். ‘அதற்கு நீ யார் என்னை இங்கிருந்து வெளியேறச் சொல்வதற்கு… நான் இங்கே தானிருப்பேன்….’ என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்க அதற்கு யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ‘நீ யார் ரோட்டில நிற்கிறதுக்குப் போடா வெளியே! என யாழ். மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடும் கைகாட்டியவாறு மிரட்டும் தொனியில் கூறினார்.
அதன் பின்னர் அங்கு நின்ற பொதுமகன் ஒருவர் யாழ்.மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரைச் சமாதானப்படுத்தினார்.எனினும், நீ நீதிமன்றத்திற்கு வர வேண்டி வரும் என யாழ். மாவட்டச் சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை எச்சரித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அங்குள்ள பொதுமக்களைப் பொலிஸார் வெளியேற்ற முற்பட்ட போதுபோராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுக்கும், யாழ். மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒவ்வொருதடவையும் எங்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளையே வழங்குகிறீர்கள் எனப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் தெரிவிக்கப்பட, அதற்கு யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ‘நானா பொய் சொல்கிறேன்? உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு “யுத்தம் முடிவடைந்து எட்டு வருடமாச்சே! இன்னும் தீர்வு கிடைக்கேலயே” என மக்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.
மீண்டும் வீதி மறியலில் ஈடுபட்டிருந்த சிவாஜிலிங்கத்தை யாழ். மாவட்டச் சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் அங்கிருந்து அகற்றுவதற்கு முற்பட்டுள்ளார். அதற்கு’நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம், இங்கேயேயிருந்தே சாவோம்’எனச் சிவாஜிலிங்கம் பதிலளித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அப் பகுதிக்குக் கலகமடக்கும் பொலிஸாரைப் பெருமளவில் வரவழைத்து வீதி மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றினர்.
அங்கு தனது மகன் காணாமல் போனதால் மிகவும் மன விரக்தியடைந்த நிலையில் பரிதாபகரமான முறையில் அழுது கொண்டிருந்த வயதான தாயாரொருவரை அங்கிருந்து சரமாரியாக இழுத்துச் சென்று வீதியோரமாக நிற்க வைத்துள்ளார்.
இதனையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் பெருமளவு கலகமடக்கும் பொலிஸாரும், புலனாய்வாளர்களும் சூழ்ந்து கொண்டனர். எனினும் அதனையும் மீறி மக்கள் நின்றபடி தமது போராட்டத்தினைத் தொடர்ந்துள்ளனர்.
சம்பவத்தைஅறிந்து குறித்த பகுதிக்கு வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், கந்தையா சர்வேஸ்வரன், பாலச்சந்திரன் கஜதீபன், எஸ்.சுகிர்தன் ஆகியோரும்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
“கொலைகார ஜனாதிபதியே திரும்பிப் போ”, “ஜனாதிபதியே ஏன் ஓடி ஒழிகிறாய்!”, “ஆக்கிரமிக்காதே! ஆக்கிரமிக்காதே தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்காதே!” , “பதில்சொல்…பதில் சொல்… இனப்படுகொலைக்குப் பதில் சொல்”, “நல்லாட்சி அரசா! நாசகார ஆட்சியா” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சிறிது தூரம் சென்ற போராட்டக்காரர்களை மேலும் முன்னேறிச் செல்ல விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து வீதியோரமாக அமர்ந்து மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.