பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மீண்டும் நிறைவேற்றுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அரசியல்வாதி பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமைக்காக துமிந்த சில்வா, மேலும் நால்வருடன் இணைந்து 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.
அதேவேளை, ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழு, சில்வாவை விடுதலை செய்ய சிபாரிசு செய்ததையடுத்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ 2021 ஜூன் மாதம் விசேட மன்னிப்பை வழங்கியிருந்தார்.
மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கசாலி ஹுசைன், பிசி ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதனை பரிசீலித்த நீதிபதிகள் பி.பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு, மன்னிப்புச் செயல்முறை பிழையானது என்றும், எனவே சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஒருமனதாக முடிவு செய்தது.
இந்நிலையில், பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.