மதுரை, அலங்காநல்லூரில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.
இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்காக மாடுபிடி வீரர்களுடன் வலிமை மிகுந்த காளைகளும் பங்கேற்ற நிலையில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்ற வீரர் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் போட்டியை, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்ராலின் பச்சைக்கொடி காட்டி ஆரம்பித்து வைத்தார்.
அலங்காநல்லூர் ஏறுதழுவுதலில், மொத்தம் 810 காளைகள் பங்கேற்றிருந்தன. களத்தில் துள்ளி வரும் காளைகளை, இளைஞர்கள் அடக்கியதுடன் சில காளைகள் சிக்கினாலும், பல காளைகள் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை.
சிறப்பாக களமாடிய முதல் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டதோடு இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டது.
மொத்தமாக நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடத்தையும், சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி 2ம் இடத்தையும், குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 13 காளைகளை அடக்கி 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், அலங்கா நல்லூர் ஏறுதழுவுதல் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளையும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.