பெரும்பாலான நபர்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும், ‘ காபி குடிக்காம நாளே விடியாது’ என சொல்லும் நபர்கள் தான் அதிகம். இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம்.
இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்வு தான். காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.
காபியை சரியான முறையில் சேமித்து வைக்காவிட்டால் காபியானது இறுகி, அதன் அமைப்பு வாசனை மற்றும் சுவை போன்றவை மாறக்கூடும். ஆனால் பிற கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்களை போல காபி காலாவதி ஆகாது.
நீங்கள் வறுத்த காபி கொட்டைகள் அல்லது சீல் செய்யப்பட்ட காபி பாக்கெட்டுகளை பல வருடங்களுக்கு ஃபிரஷ் ஆகவும், அதே நறுமணத்துடனும் வைத்திருப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
சரியான கன்டைனரை பயன்படுத்தவும். காபி கொட்டைகள் அல்லது அரைத்த காபி பொடியை காற்று உள்ளே செல்ல இயலாத டப்பாக்களில் உடனடியாக அடைத்து வையுங்கள். ஏனெனில் காற்று உள்ளே சென்றுவிட்டால் காபி அதன் சுவை, வாசனை, அமைப்பு போன்றவற்றை இழந்து விடும்.
இதைத்தவிர காபி வெளிச்சத்திற்கு உணர்திறன் கொண்டது. இதனால் அதனுடைய சுவை குறையலாம். எனவே எப்பொழுதும் காபி பொடியை வெளிச்சம் உள்ளே நுழைய முடியாத டப்பாக்களில் சேமித்து வைப்பது நல்லது.
காபி டப்பாவை எப்பொழுதுமே குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வையுங்கள். வெப்பம் மற்றும் சூரிய வெளிச்சத்தில் இருந்து விலக்கி வையுங்கள். அடுப்பு அல்லது வெப்பத்தை உருவாக்கக்கூடிய பிற பொருட்களுக்கு அருகில் காபி பொடியை சேமித்து வைக்க வேண்டாம்.
ஈரப்பதம் காபி பொடியின் சுவையை குறைத்து விடும். எனவே காபியை வறண்ட சூழலில் வையுங்கள். குளிர்சாதன பெட்டி அல்லது ஃப்ரீசரில் காபியை சேமித்து வைக்க வேண்டாம்.
ஏனெனில் அது காபியின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். வலிமையான வாசனை கொண்ட உணவுகளுக்கு அருகில் சேமித்து வைப்பதை தவிர்க்கவும் காபி எளிதாக அதன் சூழலில் இருக்கக்கூடிய வாசனைகளை உறிஞ்சும் தன்மை கொண்டது.
எனவே வலிமையான வாசனை கொண்ட மசாலா பொருட்கள் அல்லது காய்கறிகள் போன்றவற்றின் அருகில் காபியை சேமித்து வைக்க கூடாது.