யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ். அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) என்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
அதேவேளை முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் டெங்கு தீவிரமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுப்பின் ஒரு நடவடிக்கையாக இது காணப்பட்டது.
இதன்படி வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி பங்கேற்புடன் குறித்த டெங்கு ஒழிப்பு வேலை திட்டமானது முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கமைய கொக்குவில் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விஜயம் மேற்கொண்டதோடு வீடுகளில் டெங்கு நுளம்பு காணப்படும் இடங்கள் அகற்றப்பட்டதோடு பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக யாழில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு இளம் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
யாழ். மக்களின் சுகாதார ரீதியான பாராமுக செயற்பாடுகளானது இவ்வாறான உயிரிழப்புக்களுக்கு வழிவகுக்கிறது.
மேலும், சுகாதார ஊழியர்களினதும், வைத்தியர்களினதும் அறிவுறுத்தல்கள் பல்வேறு முறை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதும் அவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படுவது குறைவாக உள்ளமை கவலைக்குரிய விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.