வங்கிக் கடனட்டைகளில் நடைபெறும் பண மோசடிகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பொது மக்களின் உளவியல் ஆசைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடியாளர்கள் மிக நூதனமாக வங்கிக் கடனட்டைகளிலிருந்து பணத்தை மோசடி செய்கின்றனர்.
இந்நிலையில், இவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து பணத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய வழி முறைகளை மக்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும்.
பாதுகாப்பு கருதி எந்தவொரு தனிநபருடனும் உங்களது தனிப்பட்ட தகவல்களை இணையவழி ஊடாக பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
மோசடி செய்யும் நபர் உங்கள் தகவலைப் பெறுவதற்கு யாரேனும் ஒரு சட்டரீதியான நபர் அல்லது அமைப்பாகக் காட்டி, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பெயர்கள், கடவுச்சொற்கள், வங்கி கடனட்டை எண்கள் அல்லது வங்கித் தகவல்கள் போன்றவற்றை சேகரித்து அதன்மூலம் உங்கள் வங்கிக் கணக்குகளில் மோசடியான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளல் அல்லது உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபகரிக்க முடியும்.
அதேபோல், போலி இணையத்தளங்களில் பரிசில்கள் அல்லது சலுகைகள் பெற்று தருவதாக தெரிவித்து பயனர்களின் பெயர்கள், கடவுச்சொற்கள், கடனட்டை எண்கள் அல்லது வங்கித் தகவல் போன்ற இரகசியத் தகவல் கோரப்படும்.
அவ்வாறான நம்பத்தகாத இணையத்தளங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது.
மேலும், இது போன்ற சந்தேகத்திற்குரிய மோசடி முயற்சிகளில் உங்கள் தனிப்பட்ட வங்கி தகவல்களை நீங்கள் பகிர்ந்திருந்தால் உடனடியாக குறித்த வங்கியுடன் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்துங்கள்.