இந்த காலகட்டத்தில் பணத்தை சேமித்து வைப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. பணத்தை சேமிப்பதற்கு பலரும் பலவிதமான முறைகளை கையாள்கின்றனர்.
பணத்தை சேமிக்க சில உத்திகளையும், சேமிப்புக்கான அணுகுமுறையில் சில மாற்றங்களையும் செய்யவேண்டியது அவசியமாகும்.
இதன் மூலம் சிறந்த முறையில் பணத்தை சேமித்து பயன்பெற முடியும். பணத்தை சேமிக்க உதவும் சில யுக்திகள் குறித்து பார்க்கலாம்.
வைப்புநிதி திட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் நீண்டகால சேமிப்புக்குப் பதிலாக, குறுகிய கால சேமிப்பு வரம்பை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதில் முதல் 3 வருடங்களுக்கு மட்டுமே வட்டித் தொகைக்கான சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகியகால சேமிப்பு இலக்கை தேர்ந்தெடுப்பது அவசியமானது. தொடர் வைப்புநிதி திட்டத்தை வருடங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்காமல், மாதங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இது குறுகிய காலத்தில் தேவையான தொகையை எளிதில் சேமிக்க உதவியாக இருக்கும்.
மாதாந்திர பட்ஜெட்டில் சேமிப்பையும் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு சேமிப்பு விகிதத்தை நிர்ணயித்து அதை தவறாமல் கடைப்பிடியுங்கள்.இதன் மூலம் சேமிப்பை பற்றிய தெளிவு மற்றும் சேமிப்பு இலக்கை எளிதாக அடையவும் முடியும்.
சேமிப்பிற்க்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எதற்காகவும் எடுத்து செலவழிக்காதீர்கள். சரியான முறையில் பட்ஜெட் போட்டு அதை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
சேமிப்புக்கு என்று தனியாக ஒரு வங்கிக் கணக்கை வைத்திருங்கள். சேமிப்புக்காக ஒதுக்கும் தொகையை இந்தக் கணக்கில் செலுத்துங்கள்.
மேலும், உங்களின் மாதாந்திர மற்றும் வருடாந்திர சேமிப்பு திட்டங்களுக்கு, வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பணம் செலுத்தப்படும் முறையை தேர்ந்தெடுங்கள். இதனால் சேமிப்பு தவணைகள் செலுத்துவதில் தாமதிப்பதை தடுக்க முடியும்.
நிலையான மாத வருமானம் உள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது நீண்ட காலத்தின் அடிப்படையில் நல்ல சேமிப்பு முறையாகும்.
பலரும் பணத்தை சேமிப்பதற்கு சீட்டு கட்டும் முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு முன்பு அந்த நிறுவனம் நம்பகமானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.